டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி தொடர்பான பிரச்சினைகளால் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் போனது. முதலில் காலை 9 மணி சிறப்புக் காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பகல் மற்றும் இரவுக் காட்சிகளும் ஒத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு, தற்போது படம் இன்று காலை முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், “சில பயணங்கள் நேரத்தை மட்டுமல்ல, இதயங்களையும் சோதிக்கும். ‘கருப்பு’ திரைப்படத்திற்காக பொறுமையுடன் காத்திருந்து, தொடர்ந்து எங்களை நம்பி ஆதரவு அளித்த அனைவரிடமும் மன்னிப்பையும், அதைவிட பெரிய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காத்திருப்பு எவ்வளவு வேதனையானது என்பதை நாங்கள் நன்கு உணர்கிறோம். இந்த திரைப்படத்தை உங்கள் அன்புடனும் எதிர்பார்ப்புடனும் சுமந்திருந்தீர்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு தாமதமும் எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருந்தது. ஆனால் உங்கள் ஆதரவு, நம்பிக்கை, ஊக்கமளிக்கும் செய்திகள் மற்றும் அளவற்ற அன்பு தான் இந்தப் படத்தின் பயணத்தை உயிரோடு வைத்திருந்தது.
இன்று நன்றியுணர்ச்சியுடனும் உணர்ச்சி பொங்கும் மனதுடனும் ‘கருப்பு’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த திரைப்படத்தில் எங்களது உழைப்பு, போராட்டம், உறக்கமற்ற இரவுகள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் கலந்துள்ளன. இது இனி எங்களது கதை மட்டும் அல்ல; இந்தப் பயணத்தில் எங்களுடன் துணையாக நின்ற ஒவ்வொருவரின் கதையாகவும் மாறியுள்ளது. காத்திருந்ததற்கும், நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல், படத்தின் கதாநாயகனான சூர்யாவும், “எங்களுடன் உறுதியாக நின்று ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ‘கருப்பு’ இன்று வெளியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் கதாநாயகியான திரிஷா, இன்று ரசிகர்களுடன் இணைந்து சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் திரைப்படத்தை பார்த்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ரசிகர்களுடன் திரைப்படத்தை ரசித்தனர்.
