தமிழில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி கலந்த நகைச்சுவை படமாக உருவான இந்த திரைப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்பொறை என்ற மன்னனுக்குச் சொந்தமான மரகத நாணயத்தை கைப்பற்ற முயற்சிக்கும் கதையை மையமாகக் கொண்டு நகைச்சுவையாக உருவாக்கப்பட்டிருந்தது. அந்த மரகத நாணயத்தை கதாபாத்திரங்கள் இறுதியில் கைப்பற்றினார்களா இல்லையா என்பதே படத்தின் மையக் கதையாக அமைந்திருந்தது.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மரகத நாணயம் 2’ தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
