2025ஆம் ஆண்டுக்கான 83வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. ஆஸ்கர் விருதுக்கு இணையான அளவில் முக்கியத்துவம் பெறும் இந்த விழா, உலகளாவிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் மற்றும் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் இந்த விருது விழா, இந்த ஆண்டும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் மியூசிக்கல் மற்றும் காமெடி பிரிவில், பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் லியோனார்டோ டி காப்ரியோ நடித்த ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படம் முக்கிய விருதுகளை குவித்தது. மொத்தம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இந்த படம், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகை என 4 விருதுகளை கைப்பற்றியது. ‘மார்ட்டி சுப்ரீம்’ திரைப்படத்திற்காக திமோதி சாலமே சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். ‘இப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ’ படத்தில் நடித்ததற்காக ரோஸ் பைரன் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
‘அடலசென்ஸ்க்’ என்ற வெப் சீரீஸ் இரண்டு விருதுகளை பெற்றது. இதில் நடித்துள்ள சிறுவன் ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று கவனம் ஈர்த்தார். தனது 16வது வயதிலேயே, தனது முதல் வெப் சீரீஸுக்காக கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டிராமா பிரிவில் சிறந்த படமாக ‘ஹாம்னெட்’ தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இசைக்கான விருதை லுட்விக் கோரன்சன் பெற்றார். சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருது ‘சின்னர்ஸ்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
மேலும், ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ படத்தில் நடித்ததற்காக வாக்னர் மவுரா சிறந்த நடிகராகவும், ‘சென்டிமென்டல் வேல்யூ’ திரைப்படத்தில் நடித்ததற்காக ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் சிறந்த துணை நடிகராகவும் விருதுகளை பெற்றனர். அனிமேஷன் பிரிவில் சிறந்த படமாக ‘கே-பாப் டீமான் ஹண்டர்ஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் சிறந்த படமாக பிரேசிலிய திரைப்படமான ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ தேர்வு செய்யப்பட்டது.
