இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிடிஎன்’. இதில் ஜி.டி. நாயுடுவாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் இயக்குநராக மாறிய கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படம் குறித்து பேசிய இயக்குநர், பள்ளி நாட்களிலிருந்தே ஜி.டி. நாயுடு மீது தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாகவும், இயக்குநரான பிறகு அவரது வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற கனவை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் திரைக்கதையை எழுதி முடித்த அவர், அதை ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தினரிடம் காட்டி அவர்களின் ஒப்புதலையும் ஆதரவையும் பெற்றதாக கூறியுள்ளார்.
மாதவனை இந்த வேடத்திற்கு தேர்வு செய்தபோது, அவர் சமீபத்தில் ‘ராக்கெட்டரி’ படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்ததால் மீண்டும் அதேபோன்ற வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டியதாகவும், ஆனால் திரைக்கதையும் படத்திற்காக எடுத்த உழைப்பும் அவரை சம்மதிக்க வைத்ததாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் ஜி.டி. நாயுடுவின் முழு வாழ்க்கை வரலாற்றைச் சொல்லாது. அவர் சந்தித்த ஒரு முக்கியமான போராட்டத்தையும், அதை அவர் எவ்வாறு எதிர்கொண்டு வென்றார் என்பதையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தை விட மனிதநேயத்தை அதிகம் நேசித்த ஜி.டி. நாயுடுவின் அந்த பக்கம் தான் படத்தின் மையக்கருவாக இருக்கும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார். சத்யராஜ் இதில் ஜி.டி. நாயுடுவின் நண்பராக நடித்துள்ளார். ராமசாமி நாயக்கர் மற்றும் எம்.ஆர். ராதாவுடன் இருந்த அவரது நட்பும் படத்தில் இடம்பெறும். ஆனால் அரசியல் சார்ந்த விஷயங்கள் இதில் இடம் பெறாது என்று இயக்குநர் தெளிவுபடுத்தியுள்ளார். ‘ஜிடிஎன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறது.
