‘ஜன நாயகன்’ சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி 15ல் விசாரணையா?

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், முதலில் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, படத்தின் வெளியீட்டில் பெரும் சிக்கலை உருவாக்கிய நிலையில், திரையுலகிலும் ரசிகர்களிடமும் அதிக கவனத்தை ஈர்த்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு, தனி நீதிபதி பிடி ஆஷா வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகாமல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, தணிக்கை வாரியமும் தங்கள் தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற தெளிவில்லாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளின் உத்தேச பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு 21ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading