சமீபத்தில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான பிரபாஸ் நடிப்பிலான ‘ராஜா சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. மாருதி இயக்கத்தில் ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே படத்தின் மொத்த நீளத்தை கருத்தில் கொண்டு சுமார் 15 நிமிடங்களுக்கு குறையாத காட்சிகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளும் விவாதங்களும் உருவானது.
படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், டிரைலரில் இடம் பெற்றிருந்த பிரபாஸின் வயதான தோற்றம் கொண்ட முக்கியமான காட்சி ஏன் படத்தில் இடம்பெறவில்லை என்ற கேள்வியையும், அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர். குறிப்பாக அந்த காட்சி படத்தின் கதைக்கு கூடுதல் வலிமை தரும் என எதிர்பார்த்த ரசிகர்கள், அது திரையரங்குகளில் காண முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தனர்.
இந்த ரசிகர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொண்ட படக்குழுவினர், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முக்கியமான மாற்றத்தை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, பிரபாஸின் வயதான தோற்றம் கொண்ட அந்த காட்சியையும், மேலும் கூரையின் மேல் நின்று பிரபாஸ் சண்டையிடும் ஒரு அதிரடி காட்சியையும் படத்தில் மீண்டும் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். வரவிருக்கும் நாட்களில் இந்த கூடுதல் காட்சிகளை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
