இயக்குநர் இரா. சரவணன் எழுதியுள்ள சங்காரம் நூலின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி, வாசிப்பு குறித்து மனம் திறந்து பேசினார். அந்த நிகழ்வில் அவர் கூறியதாவது, “படிக்க வேண்டிய புத்தகங்களை சரியான நேரத்தில் கவனமாக படித்திருந்தால், இன்றைக்கு நான் இன்னும் ஒரு நல்ல இடத்தில் இருந்திருக்கலாம். சமீபத்தில் சமுத்திரகனி ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்று எனக்கு கொடுத்தார். ஆனால், அதை இன்னும் முழுமையாக படிக்க முடியாததால், அவரை சந்திக்கும் போதெல்லாம் சற்றே தயக்கத்துடன் தவிர்த்து விடுகிறேன். இதுவரை புத்தகங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே நினைத்து வந்தேன்.
ஆனால், புத்தகம் என்பது சாதாரண விஷயம் அல்ல என்பதை இப்போது புரிந்துகொண்டேன். சமூகத்தில் பல மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் உருவாக்கியவை புத்தகங்கள்தான். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், புத்தகங்களும் கதைகளும் அழிவதில்லை. பல வரலாற்று சம்பவங்களையும், காலக்கட்டங்களையும் புத்தகங்கள் தாங்கி நிற்கின்றன. அதனால் வாசிப்பு என்பது மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த சங்காரம் புத்தகம் ஒருநாள் சினிமாவாக உருவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தற்போது நானும் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துள்ளேன், அதே நேரத்தில் நிறைய கதைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக, என் அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்” என்று சூரி தெரிவித்துள்ளார்.
