தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு – சிவகார்த்திகேயன் உருக்கத்துடன் வெளியிட்ட இரங்கல் பதிவு!

பட்டிமன்ற நடுவராகவும், தமிழறிஞராகவும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா தனது 90-வது ச்ச வயதில் காலமானார். மதுரையைச் சேர்ந்த இவர், பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாற்றல் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பை பாராட்டி தமிழக அரசு சார்பில் 2000-ம் ஆண்டு கலைமாமணி விருதும், மத்திய அரசு சார்பில் 2021-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி அறிந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சிறு வயது முதல் சாலமன் பாப்பையாவின் குரல் இடம்பெறாத பண்டிகை நாட்களே இல்லை என நினைவுகூர்ந்துள்ளார். தனது கல்லூரி காலத்தில் அவரது குரல் இல்லாமல் மேடையேறியதில்லை என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அன்பு பெரியோர்களே” என்ற சாலமன் பாப்பையாவின் புகழ்பெற்ற தொடக்க வார்த்தைகளை தனது குரலில் மேடையில் பேசத் தொடங்கிய ஒவ்வொரு முறையும் தமிழ் சமூகத்தினர் ஆரவாரத்துடன் வரவேற்றதை நினைவுகூர்ந்துள்ளார். தனது பேச்சாலும் தமிழாலும் சாலமன் பாப்பையா என்றென்றும் தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக தனது புகழஞ்சலியை செலுத்துவதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading