தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராஜமவுலி, தற்போது நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் ‘வாரணாசி’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவுடன் ராஜமவுலி இணையும் இது முதல் படம் என்பதால், இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில், நடிகர் ராம்சரணுக்கு ‘மகதீரா’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற படங்கள் மூலம் சர்வதேச அளவிலான நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் ராஜமவுலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, ராம்சரண் தனது புதிய படங்களின் கதைகள் குறித்து ராஜமவுலியை சந்தித்து ஆலோசனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், ‘புஷ்பா’ படத்தின் இயக்குநர் சுகுமாருடன் ராம்சரண் அடுத்து இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்தின் ஓபனிங் காட்சி குறித்து சமீபத்தில் ராஜமவுலியிடம் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ஓபனிங் காட்சியை கேட்ட ராஜமவுலி மிகுந்த ஆச்சரியத்துக்கும் பிரமிப்புக்கும் உள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து ராஜமவுலி தனது சமூக வலைதள பதிவின் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், “இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியாது. சுகுமார் – ராம்சரண் இணையும் படத்தின் ஓபனிங் காட்சி பற்றி எனக்கு தெரியும். அதைப் பற்றி முழுமையாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த காட்சியை பார்த்தால் சுகுமாருக்கு ஹார்ட் அட்டாக் வருவது உறுதி. அது வேறு எதற்காகவும் அல்ல, அந்த ஓபனிங் காட்சிக்கு தியேட்டரில் கிடைக்கப்போகும் அமோக வரவேற்பினால்தான். அந்த காட்சியை ரசிகர்கள் பார்க்கும் போது, தங்கள் இருக்கையிலேயே நடுக்கத்துடன் இருப்பார்கள் என்பது உறுதி” என்று கூறியுள்ளார். ராஜமவுலி இவ்வாறு பாராட்டியுள்ளதால், இந்த இருவரின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பல மடங்கு உயர்ந்துள்ளது.
