நடிகை சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட மனநிலையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அந்த நோய் தனது வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியதாக தெரிவித்த அவர், தன்னுடைய அடையாளத்தையே இழந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும், எதுவுமே தனது கட்டுப்பாட்டில் இல்லை என்ற எண்ணமும் அப்போது ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அந்த கடினமான அனுபவம் மன உறுதி, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை தனக்கு கற்றுக்கொடுத்ததாக சமந்தா குறிப்பிட்டுள்ளார். “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?” என்ற கேள்வியுடன் இருந்த நிலையிலிருந்து வெளியே வரவும், இந்த அனுபவத்தின் மூலம் தான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும் தனக்கு சிறிது காலம் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் அந்த நோய் தனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் தற்போது தனது வாழ்க்கையின் மிகவும் விலைமதிப்பற்ற பகுதிகளில் ஒன்றாக மாறிவிட்டதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, சமீபத்தில் தனது கர்ப்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். தான் நடித்து தயாரித்த ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், விரைவில் மகப்பேறு விடுமுறையில் செல்ல இருப்பதாகவும், அதன்பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
