சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. தமிழகத்தில் 1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்துகள் உள்ளிட்ட சில விஷயங்கள் காரணமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தணிக்கை வாரியம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கவும், சில காட்சிகளில் ஒலியை மியூட் செய்யவும் படக்குழுவுக்கு அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, தணிக்கை வாரியம் குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொண்டு, அந்த பணிகளை முழுமையாக நிறைவு செய்து படக்குழு மீண்டும் திரைப்படத்தை தணிக்கை வாரியத்திற்கு சமர்ப்பித்தது. இதையடுத்து, ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, முன்பே திட்டமிட்டபடி ‘பராசக்தி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக, இன்று நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், அந்த படமும் தணிக்கை தொடர்பான பிரச்னையில் சிக்கியுள்ளதால், அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகரின் திரைப்படமாக ‘பராசக்தி’ மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும் படமாக அமைந்துள்ளது.
