தெருநாய்கள் தொடர்பான விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, “ஒரு நாய் எப்போது கடிக்கும் அல்லது கடிக்காது என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. நாயின் மனநிலையை யாராலும் சரியாக புரிந்துகொள்ள இயலாது. எனவே, வருமுன் காப்பதே சிறந்தது. அதனால் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களை ‘நாய்கள் இல்லாத இடங்களாக’ மாற்ற வேண்டும்” என உச்ச நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகையும் மக்களவை உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆண்களின் மனதையும் யாராலும் படிக்க முடியாது. ஒரு ஆண் எப்போது வன்கொடுமை அல்லது கொலை செய்யக்கூடும் என்பதை யாருக்கும் தெரியாது. அதற்காக அனைத்து ஆண்களையும் முன்கூட்டியே சிறையில் அடைக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாய்களையும் ஆண்களையும் ஒப்பிட்டு திவ்யா ஸ்பந்தனா வெளியிட்ட இந்த இன்ஸ்டாகிராம் பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த வகையான ஒப்பீடே தவறானது எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். விலங்கு நல ஆர்வலரான திவ்யா ஸ்பந்தனா, தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகள், பெண்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
