தடைகள் நீங்கி ‘ஜனநாயகன்’ விரைவில் வெளியாகும்… கேவின் தயாரிப்பாளர் நம்பிக்கை!

நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் தொடர்பான பிரச்னைகள் மற்றும் நீதிமன்றத் தடையால் தற்போது வெளியாக முடியாத நிலையில், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ‘ஜனநாயகன்’ படத்தை மிகுந்த அன்போடும் ஆவலோடும் எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம். கடந்த இரண்டு நாட்களாக எங்களுக்கு எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், உங்களுடன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், டிசம்பர் 18ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 22ஆம் தேதி சில திருத்தங்களை மேற்கொண்டால் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய திரைப்படத் தணிக்கை குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் தகவல் வந்தது. அவர்கள் குறிப்பிட்ட திருத்தங்களை முறையாக செய்து, மீண்டும் படத்தை நாங்கள் சமர்ப்பித்தோம். ஆனால், படத்தின் வெளியீட்டு தேதிக்கு சில நாட்கள் முன்பாக, ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. கால அவகாசம் குறைந்திருந்த காரணத்தால், நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாக வேண்டும் என்பதற்காக எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். இத்தகைய கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களால் செய்யக்கூடிய எல்லா முயற்சிகளையும் செய்திருந்தாலும், நடந்த சம்பவங்கள் அனைத்தும் எங்களது கட்டுப்பாட்டை மீறியவையாக அமைந்தன. இந்த திரைப்படத்திற்காக எண்ணற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் மனதார உழைத்த நிலையில், இப்படியான சூழ்நிலை அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேலாக, இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களின் பேரன்பை பெற்ற விஜய்க்கு ஒரு சிறப்பான பிரியாவிடையை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இந்த படத்தை தயாரித்தோம். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மிக விரைவில் படம் வெளியாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading