14 வயதில் இயக்குனர் சத்யஜித் ரே படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த‌ பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாக்கூர்!

பத்ம பூஷண் விருது பெற்ற மூத்த நடிகை ஷர்மிலா தாக்குர் (வயது 81), உலகப் புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித் ரே உடன் பணியாற்றிய தனது முதல் திரைப்பட அனுபவங்களை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 14 வயதில் சத்யஜித் ரே தனது படத்தில் எவ்வாறு நடிக்க வாய்ப்பு வழங்கினார் என்பது குறித்து அவர் விரிவாக பேசினார். ‘அபு டிரையாலஜி’ என அழைக்கப்படும் திரைப்படத் தொடரின் கடைசி படமான அபுர் சஞ்சார் 1959ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தின் மூலம் தான் நடிகை ஷர்மிலா தாக்குர் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற சத்யஜித் ரே, பதேர் பாஞ்சாலி திரைப்படத்தின் மூலம் இந்தியாவிற்கான முதல் ஆஸ்கர் விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் மொத்தம் ஐந்து திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ள ஷர்மிலா தாக்குர், தனது முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “என்னுடைய முதல் காட்சி பல ஆண்டுகளுக்கு முன்பு படமாக்கப்பட்டது. ஆனாலும் அந்த அனுபவம் இன்று வரை என் நினைவில் உள்ளது. என்னுடைய முதல் காட்சி என்பது, வீட்டை நோக்கிச் சென்று திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு காட்சிதான். பொதுவாக யாராக இருந்தாலும் தங்களுடைய முதல் நாள் படப்பிடிப்பை எளிதில் மறக்க முடியாது. எனக்கு அப்போது எல்லாமே புதிதாக இருந்தது. ஆனால் சத்யஜித் ரே எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக மாற்றினார். அதனால் அந்த நாட்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல், அழகான அனுபவமாக இருந்தன. அதுதான் ‘மானிக் தா’ (சத்யஜித் ரேவின் அன்புப் பெயர்) வின் சிறப்பு. முதல் நாளிலேயே அவர் எனக்கு அனைத்தையும் சுலபமாக புரிய வைத்தார்” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ராஞ்சியில் இறங்கி, அங்கிருந்து ஜார்க்கண்ட் வரை வாகனத்தில் பயணம் செய்தோம். அந்த இடம் இயற்கை அழகுடன் அமைந்திருந்தது. அந்த லொக்கேஷனை அவர் குறிப்பாகவே தேர்வு செய்திருந்தார். அப்போது கடும் வெயில், மரங்களில் இலைகளே இல்லை. அவருக்கு அந்த மாதிரியான சூழல்தான் தேவையாக இருந்தது. அங்கு மின்சாரம் கூட கிடையாது. இருந்தாலும் எனக்காக ஜெனரேட்டர் வைத்து கூலர் வசதியையும் செய்து கொடுத்தார். ஆண்கள் வெயிலில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். ஆனால் மாலை நேரத்தில் அந்த இடம் மிகவும் இனிமையாக இருக்கும் என்று அவர் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading