இன்றைய சூழலில் நடிகைகளை தேர்வு செய்ய ஆடிசன் நடத்தும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது – நடிகை பிரானா!

சென்னையில் பிறந்து வளர்ந்து வந்த நடிகை பிரானா, மூன்றாம் மனிதர்கள், கிளாஸ்மேட்ஸ், இளமை என்னும் பூங்காற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். தற்போது குற்றச்சாட்டு, கங்கணம் போன்ற புதிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகைகளை தேர்வு செய்யும் முறைகள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆடிசன் நடத்தாமல் சமூக வலைத்தளங்களில் நடிகைகளை தேடிப் பார்க்கும் நடைமுறை அதிகரித்துள்ளதாகவும், கருப்பான பெண் கதாபாத்திரம் என்றாலும் கலரான பெண்களை தேர்வு செய்வதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

“நான் சினிமா துறைக்குள் வந்ததன் நோக்கம் சாதிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக கட்டாயமாக கதாநாயகியாகவே நடிக்க வேண்டும் என்ற எண்ணமோ, அழகான பெண்ணாகவே திரையில் தோன்ற வேண்டும் என்ற கட்டுப்பாடோ எனக்கு இல்லை. என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். கதாநாயகி என்ற இடத்தில் நடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால வரம்பு இருக்கும். ஆனால் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடிக்கும் போது, அதற்கு வயது அல்லது கால வரையறை எதுவும் கிடையாது. எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே நான் விரும்புகிறேன். சினிமாவிற்கு நான் முதன்முதலில் வந்த காலத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தேன். அதையே காரணமாக வைத்து பல விமர்சனங்களை சந்தித்ததுடன், சில படங்களில் நடிக்க வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன. தற்போது நான் என் வயதுக்கும் உடல்நலத்திற்கும் ஏற்ற உடல் அமைப்பில் இருக்கிறேன்.

இன்றைய சூழலில் நடிகைகளை தேர்வு செய்ய ஆடிசன் நடத்தும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. சமூக வலைதளங்களில் அதிகமாக பிரபலமாக இருப்பவர்களை பார்த்தே தேர்வு செய்கிறார்கள். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் அனைவரும் திறமையற்றவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக நடிக்க வாய்ப்பு தேடி முயற்சி செய்து வரும் திறமையான பலருக்கான வாய்ப்புகள் இவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றன.மேலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க தமிழ் மொழி தெரியாத பிற மொழி நடிகைகளை தேர்வு செய்வதும் தொடர்கிறது. கருப்பான பெண் கதாபாத்திரம் தேவை என்றாலும், கலரான பெண்ணை தேர்வு செய்து அவருக்கு மேக்கப் போட்டு அந்த வேடத்தில் நடிக்க வைக்கிறார்கள். இயல்பாகவே கருப்பாக இருக்கும் பெண்களை அந்த கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடிக்க வைத்தால் என்ன தவறு? இந்த நிலைமைகள் அனைத்தும் மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading