நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள வி.எஸ். மாதேஸ்வரன், தற்போது திரைப்பட நடிகராகவும் களமிறங்கியுள்ளார். அவர் நடித்துள்ள திரைப்படத்தின் டீசர், வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த வி.எஸ். மாதேஸ்வரன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் பலரை நாம் பார்த்துள்ள நிலையில், அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. திண்டுக்கல் ஐ. லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ என்ற திரைப்படத்தில், நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் இயக்குநர் சுசீந்திரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நாமக்கல் கே.எஸ். திரையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து வி.எஸ். மாதேஸ்வரன் கூறுகையில், “அரசியலுக்கு வருவதற்கு முன்பே நாடகங்களிலும், திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களிலும் நடித்துள்ளேன். திரைப்படங்களில் நடிப்பதில் எப்போதும் எனக்கு ஆர்வம் உண்டு. அந்த வகையில் ‘டெலிவரி பாய்’ படத்தில் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு நடித்தேன். இந்த படத்தில் நடிகை ராதிகா, போஸ்வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
