விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்னையில் சிக்கியதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் பின்னணியில் தனி நீதிபதி, படத்திற்கு உடனடியாக சென்சார் சான்று வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அதற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜயின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டு, ஜனவரி 9-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்று வழங்கப்படாத காரணத்தால் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
தணிக்கை குழுவினர், படம் யு/ஏ சான்று பெறத் தகுதியுள்ளதாக முடிவெடுத்தனர். ஆனால் குழு உறுப்பினர்கள் சில ஆட்சேபனைகளை தெரிவித்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய சுமார் 15 நாட்கள் தேவைப்படும். எனவே, ‘ஜனநாயகன்’ படத்திற்கு சான்று வழங்க 4 வாரம் அவகாசம் தேவைப்படுவதாக தணிக்கை வாரியம் நீதிமன்றில் வாதிட்டது.
பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்று வழங்க பரிந்துரைத்தனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறுஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதிக உறுப்பினர்களின் முடிவை ஒதுக்க முடியாது என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
நீதிபதி பிடி ஆஷா, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது தவறு என்று கூறி, உடனடியாக படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீடு விசாரணை இன்று மாலையே தலைமை நீதிபதி அமர்வு முன் நடைபெற்றது. தலைமை நீதிபதி, இன்றைக்கே மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரம் ஏன் என்பதை கேள்வி எழுப்பினார்.தணிக்கை வாரியம், உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கி, படத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என வாதிட்டது.
தலைமை நீதிபதி அமர்வு, தணிக்கை வாரியத்திற்கு தேவையான கால அவகாசம் வழங்கப்படாமை குறித்து தெரிவித்தார். மேலும், சான்றிதழ் பெற இன்னும் சில நாட்கள் காத்திருக்க முடிந்ததென்பதை கருத்தில் கொண்டு, தனி நீதிபதி வழங்கிய உடனடி உத்தரவுக்கு தடை விதித்து, வழக்கை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.இந்த கோர்ட்டின் உத்தரவின்படி, தற்போதைய பொங்கலுக்கு‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
