மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பிரம்மயுகம்’. திகில் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம் விமர்சகர்களிடமும் நல்ல பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது. உலகளவில் நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்ட திகில் திரைப்படங்களுக்காக நடத்தப்படும் ‘Where the Forest Meets the Sea’ என்ற சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சியில் இந்த படம் தேர்வாகியுள்ளது.
ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் முதல் திரைப்படமாக ‘பிரம்மயுகம்’ இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிறப்புப் பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இது குறித்து இயக்குநர் ராகுல் சதாசிவன் தனது சமூக வலைதளப் பதிவில், “நான் சிறுவயதில் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே ‘பிரம்மயுகம்’. மொழி, எல்லைகள், நிலங்களைத் தாண்டி இந்தப் படம் அங்கீகரிக்கப்படுவது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது” என தெரிவித்துள்ளார். ‘Midsommar’, ‘The Witch’, ‘The Wicker Man’ போன்ற உலகப்புகழ் பெற்ற திகில் திரைப்படங்களுடன் சேர்ந்து இந்த படம் திரையிடப்பட உள்ளது.
