முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இருளன்’ திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். தென் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் காட்சிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் அருண் விஜய், இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக காயமடைந்துள்ளார்.
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரது தொடைப் பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அருண் விஜய், வழக்கமான பணிகளில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது மனதளவில் மிகவும் வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
‘இருளன்’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட தொடை தசைநார் கிழிவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுபோன்ற காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முழு பலத்துடன் மீண்டும் திரும்புவேன் என்ற நம்பிக்கையையும் தனது பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.இதனிடையே, இப்படத்தில் அருண் விஜய் இரு வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. பீரியட் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரிலும் அதற்கான சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அருண் விஜய்யுடன் ‘ஜெயிலர்’ புகழ் மிர்ணா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
