சினிமா இசையிலும், இன்டி இசை உலகிலும் தனக்கென தனி கவனத்தைப் பெற்றுவரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘ஓம்’, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, கார்த்தியின் ‘மார்ஷல்’, சூர்யாவின் 48-வது படம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவரது இசைப் பயணத்தில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில், எதிர்காலத்தில் யாருடைய திரைப்படத்திற்கு இசையமைக்க விரும்புகிறார் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சாய் அபயங்கர், 2024-ல் தனது முதல் பாடல் வெளியானபோது இவ்வளவு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது இயக்குநர் அட்லீயின் படத்திற்கு இசையமைப்பதை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்றும், ‘ராக்கா’ திரைப்படத்திலும் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்த அவர், சர்வதேச அளவில் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தனது மிகப்பெரிய கனவு என்று தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றில் நோலன் தனது இசையைப் பாராட்டுவது போன்று பார்த்ததாகவும், அந்தக் காட்சி தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.அந்த வீடியோவில் இடம்பெற்ற கற்பனையான தருணம் ஒருநாள் நிஜமாக வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், அதற்காக தொடர்ந்து கடினமாக உழைக்கப் போவதாகவும் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
