‘அய்யா’ படம் நடக்கவில்லை… மிகப்பெரிய வலி” – சேரன் வேதனை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் சேரன் இயக்கத்தில், ஆரி கதாநாயகனாக நடிக்கும் ‘அய்யா’ என்ற பயோபிக் திரைப்படம் உருவாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டதாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

‘ஒன்’ (ONE) திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரே ஒரு நபர் பல்வேறு திரைப்படத் துறைகளின் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சேரன், ‘அய்யா’ திரைப்படம் தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை முதலில் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் இருந்தவர் சங்ககிரி ராஜ்குமார் என்றும், அவர் ஏற்கெனவே அதற்கான கதையை உருவாக்கியிருந்ததாகவும் சேரன் தெரிவித்துள்ளார். பின்னர் சில காரணங்களால் தயாரிப்பாளர்கள் தன்னை அணுகியபோது, “ராஜ்குமாரே இப்படத்தை இயக்கட்டும். அவருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்” என்றே தான் முதலில் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவரின் நீண்டகால உழைப்பையும் கனவையும் தான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் விளக்கியுள்ளார்.

இருப்பினும், ராமதாஸ் தன்னிடம் நேரடியாக சில விஷயங்களை கூறி, திரைப்படம் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதையும் விளக்கியதாக சேரன் தெரிவித்துள்ளார். அவரது அன்பையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாததால் இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக சங்ககிரி ராஜ்குமார் இரண்டு ஆண்டுகளும், தானும் தனது குழுவினரும் ஒன்றரை ஆண்டுகளும் உழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

1987-ம் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், அந்த காலத்திற்கேற்ற கிராமங்கள், மனிதர்கள் மற்றும் இடங்களைத் தேடி தனது 15 பேர் கொண்ட குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டதாக சேரன் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் படம் தொடங்க முடியாமல் போனது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

“ஒரு படைப்பாளிக்கு சம்பளத்தைவிட தனது கற்பனை திரையில் வருவதுதான் முக்கியம். படம் வெளிவர வேண்டும் என்பதற்காக சம்பளம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை” என்ற மனநிலையில் தான் இருப்பதாக சேரன் தெரிவித்துள்ளார். இறுதியில் தந்தை-மகன் இடையேயான மனக்கசப்பு காரணமாக திரைப்படம் நின்றுவிட்டதாகவும், தற்போது அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்துவிட்டாலும் படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading