நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ திரைப்படங்களை நாளை மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ திரைப்படங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
