நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இது விஜயின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜனவரி 9) வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், அதன் வெளியீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணையில், தணிக்கை குழு இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை குழுவின் சில உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்ததன் காரணமாக, படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய பொதுவாக 15 நாட்கள் தேவைப்படும் என்றும், அதனால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க குறைந்தபட்சம் 4 வார அவகாசம் தேவைப்படும் என்றும் தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இந்த விவகாரத்தில் எங்களிடம் எந்த தீயநோக்கமும் இல்லை என்றும் தணிக்கை வாரியம் வாதிட்டது.
இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், பெரும்பான்மை தணிக்கை குழு உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்துள்ளதாகவும், பெரும்பான்மை இல்லாதபோதுதான் ஒரு படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் வாதிட்டது. அதிக உறுப்பினர்களின் முடிவை செல்லாது என்று எப்படி அறிவிக்க முடியும் என்றும் தயாரிப்பு நிறுவனம் கேள்வி எழுப்பியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், இன்று (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி, நீதிபதி பிடி ஆஷா இன்று தீர்ப்பை வாசித்தார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது தவறானது என்றும், உடனடியாக அந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட யு/ஏ சான்றிதழுடன் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தணிக்கை வாரியம் மேல்முறையீடு: இதனிடையே, தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மேல்முறையீட்டை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் அல்லது வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
