மலையாள திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துத் தனித்த அடையாளத்தை பெற்ற நடிகர் புன்னப்புரா அப்பச்சன், ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவராக இருந்து வந்தார். 77 வயதான அவர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவால் மலையாள சினிமா உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவருக்கு மேரிக்குட்டி என்ற மனைவியும், ஆண்டனி ஜெரோம் மற்றும் ஆலிஸ் அல்போன்ஸ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

தொடக்க காலத்தில் எல்ஐசி நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்த புன்னப்புரா அப்பச்சன், பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் காலடி வைத்தார். அதன் பின்னர் சுமார் ஆயிரம் திரைப்படங்களில் நடித்துக் கலைப் பயணத்தை விரிவுபடுத்தினார். 1970-களில் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், பிரேம் நசீர், சத்யன் போன்ற முன்னணி நடிகர்களுடன் தொடங்கி, சமீபத்திய இளம் நடிகர்களான நிவின் பாலி, தியான் சீனிவாசன் உள்ளிட்ட பலரது படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ‘மதிலுகள்’, ‘சங்கம்’, ‘தி கிங்’, ‘கதுவா’ போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
ஹிந்தியில் திலீப் குமார் நடித்த ‘துனியா’ திரைப்படத்தில் அவரை கைது செய்யும் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த ‘சுறா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். கடைசியாக சுரேஷ் கோபி நடித்த ‘ஒத்தக்கொம்பன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ஐந்து திரைப்படங்களிலும் இவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
