‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தனது திரையுலகப் பயணத்திற்கு நிறைவு கொடுத்து, முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த உள்ளார் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘பூவே உனக்காக’. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகே விஜய், அனைத்து தரப்பினரிடமும், குறிப்பாக குடும்ப ரசிகர்களின் மனங்களில் தனித்த இடத்தைப் பெற்றார்.
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான ‘பூவே உனக்காக’ திரைப்படம், 250 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர், சுமார் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, விக்ரமன் இயக்கத்தில் ‘உன்னை நினைத்து’ என்ற படத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே, இயக்குநர் விக்ரமன் மற்றும் விஜய் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒரு காட்சிக்காக மரத்தின் மீது ஏறச் சொல்லப்பட்டபோது விஜய் அதற்கு மறுத்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதன் காரணமாக, ‘உன்னை நினைத்து’ படத்தில் விஜய்க்கு பதிலாக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டார். அந்த படம் 2002ஆம் ஆண்டு வெளியாகி, 100 நாட்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது, இயக்குநர் விக்ரமன் அவ்வப்போது பழைய நினைவுகளை பகிரும் வகையில் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், “‘உன்னை நினைத்து’ படத்தில் இடம்பெற்ற ‘என்னை தாலாட்டும்’ பாடல், சமீபத்தில் இலங்கையில் உள்ள சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பாடலை முதலில் தளபதி விஜய் அவர்களை வைத்து தான் படமாக்கியிருந்தேன். அந்த நினைவுகள் மனதில் தோன்றியதால், அந்த பாடலுக்கான பழைய வீடியோ கேசட் ஒன்று கிடைத்தது. மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன். இதனை தற்போது உள்ள மிஸ்டர் சூர்யாவின் வீடியோவுடன் ஒப்பிட வேண்டாம். இருவருமே சிறந்த நடிகர்கள்,” என்று பதிவிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
