இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “பராசக்தி என்பது மிகுந்த வலிமை கொண்ட பெயர். அந்த பெயருக்கேற்ற வகையிலேயே இந்த திரைப்படமும் அதே அளவு சக்திவாய்ந்ததாக இருக்கும். இந்த படம் உங்களை எல்லாரையும் நேரடியாக 1960-களுக்கே டைம் டிராவல் செய்து அழைத்து செல்லும். மாணவர்கள் எப்போதுமே மிகுந்த வலிமை கொண்டவர்கள். அந்த காலகட்டத்தில் அந்த வலிமை எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதைத்தான் இந்த படத்தின் மூலம் நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். படத்தின் கன்டென்ட் குறித்து பலர் பலவிதமான கருத்துகளை கூறினாலும், பலரின் தியாகங்களை நேர்மறையாகவும் மரியாதையுடனும் சொல்லும் படமாகவே பராசக்தி இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “இப்போது நான் ரிலீஸ் தேதி தொடர்பான விஷயத்திற்கு வருகிறேன். முதலில் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் அக்டோபர் தீபாவளிக்கு விஜய் சார் படம் உறுதி செய்யப்பட்டதால், அதன் பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் வகையில் நாங்கள் வேலை செய்தோம். அந்த நேரத்தில் திடீரென விஜய் சார் நடித்த ‘ஜன நாயகன்’ படம் பொங்கலுக்கு புஷ் செய்யப்பட்டதாக தகவல் வந்தது. உடனே எனக்கு கொஞ்சம் பதற்றம் வந்தது. ஆகாஷ் ப்ரோவுக்கு கால் செய்து, ‘விஜய் சார் படம் பொங்கலுக்கு வருகிறதே, நம்ம ரிலீஸ் தேதியை முன்னோக்கி அல்லது பின்னோக்கி மாற்றலாமே’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நம்ம இன்வெஸ்டர்களுக்கெல்லாம் ஏற்கனவே பொங்கல் என்றே சொல்லியிருக்கோம். தேதி மாற்ற வேண்டும் என்றால் சம்மருக்குத்தான் மாற்ற முடியும். அப்போ தேர்தல்கள் இருக்கிறது’ என்று சொன்னார். சரி என்று விட்டுவிட்டேன். ஆனாலும் அந்த விஷயம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
அதற்குப் பிறகு விஜய் சார் மேனேஜர் ஜகதீஷ் சாருக்கு நான் கால் செய்து, ‘ஜன நாயகன் பொங்கலுக்கு வருது, பராசக்தியும் அதே நேரத்துல வருது’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘இதுல என்ன பிரச்சனை ப்ரோ, பொங்கலுக்கு ஈஸியாக இரண்டு படங்கள் வரலாம் என்றார். நான் உடனே, உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்குத்தான் பிரச்சனை ப்ரோ. ஏனென்றால் இது விஜய் சார் லாஸ்ட் படம். இதுக்கு நடுவில் யாராவது தேவையில்லாத காமெடி பண்ணுவார்கள். நீங்கள் ஒரு தடவை விஜய் சார் கிட்ட பேசுங்கள்’ என்றேன். அவர் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு திரும்ப வந்து, ‘எந்த பிரச்சனையும் இல்லை, சூப்பராக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகட்டும். எஸ்.கே-க்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள்’ என்று விஜய் சார் சொன்னதாக அவர் தெரிவித்தார் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், மக்களே, 33 வருடங்களாக ஒருவர் நம்ம எல்லாரையும் தொடர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறார். ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜன நாயகன்’ படத்தை பார்த்து கொண்டாடுங்கள். அதேபோல் ஜனவரி 10-ஆம் தேதி ‘பராசக்தி’ திரைக்கு வருகிறது, அதையும் பார்த்து கொண்டாடுங்கள். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் சொல்வது ஒன்றுதான். இது அண்ணன் – தம்பி பொங்கல். இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள்” என்று கூறியுள்ளார்.
