இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. 1965ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் பின்னர் வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, பொங்கலுக்கு முன்பாகவே ஜனவரி 10ஆம் தேதியே படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு பராசக்தி படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 3 நிமிடங்கள் 17 விநாடிகள் நீளமுள்ள இந்த டிரைலரில், மத்திய அரசு பணியில் பணியாற்றும் அதிகாரியாக சிவகார்த்திகேயன் அறிமுகமாகிறார். மத்திய அரசு ஹிந்தியை ஆட்சிமொழியாக்கும் சட்ட அறிவிப்பை வெளியிடும் நிலையில், அவர் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஈடுபடுகிறார். அதே சமயத்தில் மாணவராக இருக்கும் அவரது தம்பி, ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்.
இதனுடன், ஆடியோ ஜாக்கியாக நடித்துள்ள நடிகை ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனுக்கு ஹிந்தி மொழியை கற்றுக்கொடுக்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். ஹிந்தி திணிப்பை மையமாக கொண்ட இந்த போராட்டம், இந்த மூன்று பேரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதும், ஒரு சாதாரண மத்திய அரசு ஊழியராக இருக்கும் சிவகார்த்திகேயன், அரசுக்கு எதிராக எவ்வாறு ஒரு மாபெரும் மாணவர் புரட்சியின் தலைவனாக மாறுகிறார் என்பதும் டிரைலர் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு எதிராக நிற்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ரவி மோகன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. “காலி பயலுங்க தான் மக்களோட பார்வையில தலைவர்களா தெரியலாம்ல சார்”, “100 கோடி பேருக்கு கேட்குற மாதிரி சுடுவோம், சத்தம் கேட்டு அவனே வருவான், மிஸ்டர் அண்ணா (அண்ணாதுரை) இதுக்கு பின்னால நீங்களா இருக்கிறீங்க? இல்லை, ஆனா இதை பண்ணவன் யாரா இருந்தாலும் அவன் என் தம்பி, தமிழர்கள் ஹிந்தி திணிப்புக்குத்தான் எதிரானவங்க, ஹிந்திக்கோ, ஹிந்திக்காரங்களுக்கோ இல்ல”, என் தாய்மொழியை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு” போன்ற வலுவான வசனங்கள், அந்நேரத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை தெளிவாக பிரதிபலிப்பதாக டிரைலர் அமைந்துள்ளது.
