‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைத் தொடர்ந்து, பிரப1ல இயக்குநர் ராஜமவுலி இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வாரணாசி’. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துவருகிறார். அவருடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் அறிவிப்பு டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த நிலையில், அந்த டீசரை பாரீசில் அமைந்துள்ள பிரபல திரையரங்கான ‘லீ கிராண்ட் ரெக்ஸ்’-இல், ஜனவரி 5ஆம் தேதியான நாளை இரவு 9 மணிக்கு திரையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு திரையிடப்படும் முதல் இந்திய திரைப்பட டீசர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை, இந்திய திரைப்படங்களை பிரெஞ்சு மொழியில் வெளியிடும் விநியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த டீசர் மிகப்பெரிய திரையில், சிறப்பான தொழில்நுட்ப வடிவமைப்புடன் திரையிடப்படுவதால், பார்வையாளர்களை பெரும் அளவில் ஈர்க்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
