ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‛குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் சர்வதேச கார் ரேஸ்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த போட்டிகளில் அஜித் தலைமையிலான ரேசிங் அணி சிறப்பாக செயல்பட்டு சில முக்கிய விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸ் நிகழ்வில் அஜித் பங்கேற்றபோது, இயக்குநர் ஏ.எல்.விஜய் நேரில் சென்று அந்த கார் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதே சமயம், இயக்குநர் சிறுத்தை சிவாவும் அஜித்தை மையமாக வைத்து ஒரு விளம்பரப் படத்தை இயக்கியுள்ளார். மேலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் அஜித் ரேசிங் ஆவணப்படம், அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், அஜித் நடித்த ‛கிரீடம்’ திரைப்படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், ‛பில்லா, ஆரம்பம்’ படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், ‛வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, ‛குட் பேட் அக்லி’ படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அஜித்தை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
