இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் பலரும் பங்கேற்று, தங்களுடைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குநர் மணி ரத்னம், “சுதா கொங்கரா என்னிடம் ‘ஆயுத எழுத்து’, ‘யுவா’ ஆகிய இரண்டு படங்களிலும் வேலை செய்தவர். அந்த படங்களில் அவர் கண்டினியூட்டி இன்சார்ஜாக பணியாற்றினார். எப்போதும் அவருடைய கையில் ஒரு கேமரா இருக்கும். ஏராளமான கலைஞர்கள், பல ஹீரோக்கள், பல ஹீரோயின்களுடன் அவர் பணியாற்றியிருக்கிறார். ஆனால், எந்த ஒரு கலைஞருமே சுதாவிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஷூட்டிங் முடிந்து வெளியே செல்ல வேண்டுமென்றாலும், சுதாவைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
கண்டினியூட்டி தொடர்பான சிறிய தவறுகளையும் கவனிக்காமல் அவர் விடமாட்டார். அந்த காலத்திலேயே சுதாவைப் பார்த்து பயப்படாத கலைஞர்கள் யாருமே கிடையாது. அப்போவே அப்படி என்றால், இப்போது சொல்லவே தேவையில்லை. சிவகார்த்திகேயன் எப்போதும் தனது ஸ்கிரிப்ட்களை மிகவும் கவனமாகவும் சரியாகவும் தேர்வு செய்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மேடையில் எழுந்து நின்று, மணி ரத்னத்துக்கு நன்றி தெரிவித்தார்.
