முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக தனது முதல் திரைப்படமான ‘சிக்மா’ மூலம் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். மேலும் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ திரைப்படப் பள்ளியில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான பட்டயப் படிப்பை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுத்து தொடர்பான இளங்கலை சிறப்புப் பட்டப் படிப்பையும் பயின்றுள்ளார். திரைப்பட இயக்கத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட அவர், ஏற்கனவே சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிரடி பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், ‘சிக்மா’ திரைப்படம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “சிக்மா எனக்கு மிகவும் சிறப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு பயணமாக அமைந்துள்ளது. நான் எழுதிய கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. வரும் ஜூலை 31ஆம் தேதி இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். மேலும் விரைவில் திரைப்படம் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ திரைப்படம் வருகிற ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
