தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், தொடர்ந்து தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசைத்துறையில் மட்டுமல்லாமல், நடிகராகவும் தனது தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ள அவர், பல்வேறு கதைக்களங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனுடன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வரும் அவர், ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கவும் தயாராகி வருகிறார்.
இதற்கிடையில், இயக்குநர் பா. இரஞ்சித் தலைமையிலான நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், டிவைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்த்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ், தனித்த இயக்குநராக அறிமுகமாகிறார். இதனால் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ‘வெக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள முதல் பார்வை விளம்பரப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி வில்லனாக நடித்துள்ளதுடன், நடிகை ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீடு அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளதால், இந்த திரைப்படம் ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையும் திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.
