இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலா. அந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட அவர், பின்னர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் இருந்து விலகாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்து வருகிறார். இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பேசிய சோபிதா துலிபாலா, “வேட்டுவம் என்பது வழக்கமான கும்பல் பின்னணியிலான திரைப்படம் மட்டுமல்ல. எனது திரைப்பயணத்தில் நான் வெளிப்படுத்தியுள்ள சிறந்த நடிப்புகளில் ஒன்றாக இந்த திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன். உலக அழிவுக்குப் பிந்தைய சூழலை அடிப்படையாகக் கொண்ட வித்தியாசமான பின்னணியில் அறிவியல் புனைகதை அம்சங்களுடன் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும், கதை ஒரே காலக்கட்டத்தில் பயணிக்காமல் பல்வேறு காலப்பகுதிகளை கடந்து செல்லும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
