2015ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. ஹாரர் கதைக்களத்தில் உருவான இந்த படம், வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, சுமார் 17 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் அஜய் ஞானமுத்து இயக்குநராக கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ போன்ற படங்களை இயக்கிய அவர், 2024ஆம் ஆண்டு ‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கினார். அருள்நிதி – பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்த அந்த படம், சுமார் 20 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 75 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்திலும் இரண்டாம் பாகத்தில் நடித்த அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று ‘டிமான்டி காலனி 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், தலையில் கிரீடம், கையில் வாள் ஏந்தியபடி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அருள்நிதி, வில்லன் தோரணையில் போஸ் கொடுப்பது போல் காணப்படுகிறார். இந்த தோற்றம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் கோடை விடுமுறை காலத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
