‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ‘தீரன்’ திரைப்படத்தின் மூலம் பெரும் புகழை பெற்றவர் இயக்குனர் வினோத். அதன் பின்னர், நடிகர் அஜித்தின் மூன்று திரைப்படங்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற அவர், தற்போது நடிகர் விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தையும் இயக்கும் அளவிற்கு, முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். சமீப காலமாக பாலிவுட் நடிகர்களை அழைத்து வந்து, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்க வைக்கும் போக்கின் தொடர்ச்சியாக, ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினோத்.

பாபி தியோல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், கடந்த சில காலங்களாக ஹிந்தி சினிமா, பாபி தியோலை ஏன் சரியாக பயன்படுத்தவில்லை என்பது எனக்கு புரியவில்லை. அவர் உண்மையிலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான முழுமையான மெட்டீரியல். சில கதாபாத்திரங்களை எழுதும் போது, அது திரையில் எவ்வாறு உருவாகப் போகிறது என்ற ஆவலும் ஆச்சரியமும் இருக்கும். அந்த வகையில், நான் எழுதியதை விடவும், நான் எதிர்பார்த்ததை விடவும், பாபி தியோல் அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக உயிர்ப்பித்துள்ளார்.
அவர் இயல்பாகவே மிகவும் அமைதியான நபர். ஆனால், நடிப்பு என்று வந்துவிட்டால், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். எதிர்காலத்தில் எனக்கு ஹிந்தியில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக அவருடன் இணைந்து ஒரு முழு ஆக்ஷன் படம் செய்ய விரும்புகிறேன். அந்த அளவிற்கு அவருடன் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
