வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தில், நடிகர் அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரை வாழ்க்கையில் ஒரு சிறிய பின்னடைவை சந்தித்த காலகட்டத்தில், ‘மங்காத்தா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அஜித்தின் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பும், படத்தின் அதிரடியான பின்னணி இசையும் தான்.

கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள், இந்த படத்தில் அவரை வில்லனாகவும் உற்சாகமாக கொண்டாட வைத்தது ‘மங்காத்தா’. அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களை மிரள வைத்தது. ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகளும் திரையரங்குகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், ‘மங்காத்தா’ திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் “கிங்மேக்கர்” என்ற பதிவை பகிர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘மங்காத்தா’ திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டு “தொடர்ந்து இணைந்திருங்கள்” என்று தெரிவித்துள்ளனர். இதனால், ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
