‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற தொடர்ந்து கவனம் பெற்ற வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், சமீபத்தில் இயக்கிய திரைப்படம் ‘பைசன்’. இந்த படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமூக அரசியல் பின்னணியுடன் உருவான இந்த திரைப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசிய மாரி செல்வராஜ், நடிகை ஜான்வி கபூர் நடித்த ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் தன்னை ஆழமாக பாதித்ததாக கூறியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘ஹோம்பவுண்ட்’ படம் என்னை மனதளவில் மிகவும் உலுக்கியது. இரண்டு மூன்று நாட்கள் எனக்கு தூக்கமே வரவில்லை. ஒரு நாள் முழுவதும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அந்த அளவுக்கு அந்த திரைப்படம் என்னை பாதித்தது. இப்படிப்பட்ட தாக்கத்தை அந்த படம் ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
