நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் பின்னணியைக் கொண்டதாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படம் 2023ஆம் ஆண்டு வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரீமேக் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து, ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி விளக்கம் அளித்துள்ளார். அந்த படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.
இந்த வதந்திகள் குறித்து அவர் பேசுகையில், “‘ஜன நாயகன்’ தளபதி விஜய்யின் படம். விஜய் சாரை நான் இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவர் உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். ‘ஜன நாயகன்’ படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு உள்ளதா, இல்லையா என்பது படம் வெளியாகும் பிறகுதான் தெரியும்” என்று கூறி, ரீமேக் வதந்திகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.
