நடிகை பாக்யஸ்ரீ போர்ஸுக்கு 2025ஆம் ஆண்டு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான அவர், 2025ஆம் ஆண்டில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகைகளில் ஒருவராக மாறினார். இந்த ஆண்டில் அவரின் நடிப்பில் ‘கிங்டம்’, ‘காந்தா’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின.

இந்த மூன்று திரைப்படங்களும் பெரிய அளவில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை என்றாலும், பாக்யஸ்ரீ போர்ஸ் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2026ஆம் ஆண்டில் மேலும் பல புதிய திரைப்படங்களில் அவர் நடிக்க உள்ள நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டுக்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பாக்யஸ்ரீ போர்ஸ், 2025ஆம் ஆண்டு அன்பும் கற்றல்களும் நிறைந்த ஒரு வருடமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். “2025-க்கு நன்றி. அன்பு, சிரிப்பு மற்றும் கற்றல்கள் நிறைந்த ஒரு வருடம். இதற்கெல்லாம் நன்றி” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது பாக்யஸ்ரீ போர்ஸ், நடிகர் அகில் அக்கினேனிக்கு ஜோடியாக ‘லெனின்’ திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் 2026 கோடை காலத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
