நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான அந்தப் பாடலை சூர்யாவே தனது குரலில் பாடியிருப்பதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. குடும்பத் திருமண கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு, கென் கருணாஸ் எழுதிய வரிகளில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
