இந்திய சினிமாவை உலக அளவில் கவனிக்க வைத்த ‘கே.ஜி.எப்’ திரைப்படத்தில் நடிகர் யாஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. அந்த படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற அவர், தமிழில் நடிகர் விக்ரமுடன் ‘கோப்ரா’ திரைப்படத்திலும், தெலுங்கில் நடிகர் நானியுடன் ‘ஹிட்-3’ திரைப்படத்திலும் நடித்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ‘தெலுசு கதா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டியிடம், “நீங்கள் சினிமாவிற்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும், குறைவான படங்களிலேயே நடித்துள்ளீர்கள். இதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி ஷெட்டி, “உண்மைதான். கடந்த 10 ஆண்டுகளில் நான் குறைவான படங்களில்தான் நடித்துள்ளேன். ஆனால், நடித்த படங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமை உள்ளது. எனக்கு படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. எண்ணிக்கையால் மட்டுமே ஒரு நடிகையின் திறமை வெளிப்படாது. உண்மையான திறமை தான் ஒருவரை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். அந்த வகையில் நான் என் பாதையில் பளிச்சிட்டு வருவதாகவே உணர்கிறேன்” என்று மனதார கூறினார்.
