தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டி56’ திரைப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் வேகமெடுத்து வருகின்றன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் 25-ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்றது. இதில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தின் வெற்றிக்காக கோவிலில் தனுஷ் 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்கியதுடன், பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ‘டி56’ படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பகட்ட பணிகள் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், படத்தின் கதைக்களம் மதுரையை பின்னணியாகக் கொண்டிருப்பதால் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
