அஜித் நடிக்கும் ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களால் AK 64 என குறிப்பிடப்பட்ட இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, படத்தின் பெயர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரது பெயர்களுடன் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியானது.
படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்த நிலையில், அஜித்தின் விருப்பத்திற்கு ஏற்ப பேச்சுவார்த்தைகள் இறுதியாக முடியாததால், நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த சொந்த தயாரிப்பில் நடிக்காத கொள்கையை மாற்றியுள்ளார். இதையடுத்து தனது மனைவி ஷாலினியின் பெயரில் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 2-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அஜித் கார் பந்தயங்களில் பங்கேற்று வந்ததால் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ‘டேர்டெவில்’ படத்தை பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் உன்னி முகுந்தன், கன்னடத்தில் உபேந்திரா, தெலுங்கில் வெங்கடேஷ் ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தனது கார் பந்தயப் பணிகளை முடித்துவிட்டு அடுத்த மாத இறுதியில் சென்னை திரும்பியதும், சுமார் பத்து நாட்களுக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
