Advertisement

என்ன சொல்ல வருகிறது ‘ஹைக்கூ’?

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், பெமினா மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கோவை, சென்னை மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றது.முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஏகனின் கதாபாத்திரம் ஒரு வருடம் படிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அவர் ஏன் அங்கு செல்கிறார், அந்த பின்னணியில் என்ன இருக்கிறது, ஒரு ஆண் அந்த கல்லூரியில் எப்படி படிக்க முடியும் என்பதுடன் காதலின் மற்றொரு பக்கத்தையும் இணைத்து கதை சொல்லப்பட்டுள்ளதாக படக்குழு கூறுகிறது.

‘ஜோ’ படத்தை இயக்கிய ஹரி இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தில் வரும் பெண்கள் கல்லூரி தொடர்பான பகுதி சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும், கதையில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. ‘அலைபாயுதே’, ‘ரிதம்’ போன்ற படங்களின் காதல் கதைகளைப் போல வித்தியாசமான அணுகுமுறையில் ‘ஹைக்கூ’ இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

மலையாளப் படங்களில் நடித்த பெமினா கதாநாயகியாகவும், மலையாள நடிகை ஸ்ரீதேவி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். கதாநாயகனின் 19 முதல் 26 வயது வரையிலான வாழ்க்கையை படம் பதிவு செய்கிறது. மூன்று வரிகளில் எழுதப்படும் கவிதை வகையான ‘ஹைக்கூ’ என்ற பெயர், ஹீரோ மற்றும் இரண்டு கதாநாயகிகளைச் சுற்றி கதை நகர்வதால் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரிலீஸுக்கு முன்பே ஓடிடி, சாட்டிலைட் மற்றும் இசை உரிமைகள் விற்பனையாகியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

—

Add a Comment

Leave a Reply