‘ஜோ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. இப்படத்தில் ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படங்களில் நடித்த ஏகன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘மின்னல் முரளி’, ‘சேஷம் മൈക്കேൽ ഫாத்தിമ’ படங்களில் நடித்த பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
யுவராஜ் சின்னசாமி இயக்கும் இப்படத்திற்கு ‘ஜோ’ பட இயக்குநர் ஹரி ஹரன்ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். சித்து குமார் இசையமைக்கும் ‘ஹைக்கூ’, ரசிகர்களை கவரும் வகையில் ஒரு ஃபீல் குட் லவ் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர்.
குறிப்பாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனிடையே தற்போது ‘ஹைக்கூ’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
—
