கிராமத்தில் மனைவி ரோஜாவுடன் வசித்து வரும் கங்கை அமரன், தங்களது செல்ல ஆட்டை பாசமாக வளர்த்து வருகிறார். எதிர்பாராத விதமாக மணல் கொள்ளை கும்பலின் லாரியில் சிக்கி அந்த ஆடு உயிரிழக்கிறது. இதற்கு நியாயம் கேட்டு காவல் நிலையத்துக்குச் செல்லும் கங்கை அமரனுக்கு போலீஸாரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், தனது ஊரில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக நேரடியாக குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார்.
அவரது புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கும் வி.ஏ.ஓ அர்ச்சனா, மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளை ஆதாரங்களுடன் பிடிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் யுகேந்திரன் அவரை கொலை செய்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகு கங்கை அமரன் நீதிமன்றத்தை அணுக, வழக்கு சிபிஐ விசாரணைக்கு செல்கிறது. அதே நேரத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கிறார்.
இந்த பாதுகாப்புப் பணிக்கு உயர் அதிகாரிகளிடம் பெரிய மதிப்பு இல்லாத காவலராக இருக்கும் தர்ஷன் கணேசன் நியமிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் இதை வழக்கமான பணியாகவே நினைக்கும் அவர், வழக்கின் பின்னணியில் இருக்கும் ஆபத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்கிறார். அதன்பிறகு கங்கை அமரனை பாதுகாக்கும் பணியை தீவிரமாக மேற்கொள்கிறார். மணல் கொள்ளை கும்பலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் கங்கை அமரனையும் வழக்கையும் தர்ஷன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
கங்கை அமரன் கிராமத்து மனிதராக மிகவும் இயல்பாக நடித்துள்ளார். அவரது மனைவியாக வரும் ரோஜாவும் கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளார். தர்ஷன் கணேசனுக்கு, ஆரம்பத்தில் சாதாரணமாக செயல்படும் காவலராக இருந்து தனது பொறுப்பை உணர்ந்து மாறும் கதாபாத்திரம் அமைந்துள்ளது. அந்த மாற்றத்தை அவர் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் கவனம் பெறுகின்றனர்.
மணல் கொள்ளையை மட்டும் மையமாகக் கொள்ளாமல், அதன் பின்னால் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் போராட்டத்தையும் இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் கதையுடன் இணைத்துள்ளார். எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு கிராமத்து சூழலை இயல்பாக பதிவு செய்கிறது. இளையராஜாவின் இசையும் படத்தின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக ‘பூங்காற்று திரும்புமா…’ பின்னணி இசை பயன்படுத்தப்படும் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.
மணல் கொள்ளைக்கு எதிராக ஒரு கிராமத்து மனிதன் தொடங்கும் போராட்டம், அதில் சிக்கிக் கொள்ளும் காவலரின் பொறுப்பு என இரண்டு கோணங்களில் கதையை நகர்த்தும் சமூக அக்கறை கொண்ட படமாக ‘லெனின் பாண்டியன்’ அமைந்துள்ளது.
