மீசைய முறுக்கு-2 திரைப்படம் எப்படி இருக்கு? -‌திரை விமர்சனம்!

கானா இசையை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் கலைஞராக ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார். அந்த முயற்சியில் அவருக்கு முன்பே அவரது தாத்தாவும், தந்தையும் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார்கள். பல மேடைகளில் கானா பாடல்களை ஒலிக்கச் செய்ய அவர்கள் எடுத்த முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறவில்லை.

அதே கனவு அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது. தனது மகன் மூலமாகவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும், அங்கும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இதனால் மூன்றாவது தலைமுறையாக களமிறங்கும் ஆதி, கானாவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் போராடுகிறார். அந்த இலக்கை அவர் அடைந்தாரா, இசைத்துறையில் தனது இடத்தை உருவாக்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஆதி தனது வழக்கமான எனர்ஜியுடன் படம் முழுவதையும் தாங்கிச் செல்கிறார். பாடல், நடனம், ‘அட்வைஸ்’ என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் குறைவில்லாமல் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சென்னை கானாவுக்காக அவர் முன்னெடுக்கும் போராட்டமும், அதற்காக எடுக்கும் முயற்சிகளும் வடசென்னை ரசிகர்களிடம் தனிப்பட்ட வரவேற்பை பெறும் வகையில் அமைந்துள்ளன.

மூன்று வெவ்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் சைத்ரா ஆர்ச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நாயகிகளாக இடம்பெற்றுள்ளனர். மூவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளனர். கெட்டிகா சர்மாவின் நடனம் கவனம் ஈர்க்கும் நிலையில், சைத்ராவின் நடிப்பும் ரம்யாவின் இயல்பான சிரிப்பும் ரசிகர்களை கவர்கின்றன.

ஆதியின் நண்பராக வரும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர். பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. அதேபோல் ஆதியின் இசையும் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘ஆரா பத்துக்கு பத்து…’ பாடல் ரசிகர்களை முழுமையாக கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்கிறது.முதல் பாகத்தின் மைய உணர்வை தொடர்ந்து, அதனுடன் சமூக மாற்றம் மற்றும் இளைஞர்களுக்கான கருத்துகளையும் இணைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. நடிப்புடன் இயக்குநராகவும் தனது முத்திரையை பதிக்க முயன்றுள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளன.

Add a Comment

Leave a Reply