சென்னை பின்னணியில் 80 காலகட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ படத்தில் விஜய் சேதுபதி உள்ளூர் தாதாவாக நடித்துள்ளார். சாராய வியாபாரம், அடிதடி என ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பத்தாவைக் கண்டு பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் பயப்படுகின்றனர். ஆனால், எதிர்பாராத ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது.
இதன்பிறகு பத்தாவுக்கு என்ன நடந்தது, அவரை இந்த சிக்கலில் சிக்க வைத்தது யார் என்பதுதான் படத்தின் முக்கியக் கதை. குறிப்பாக முதல் பாதி காமெடி மற்றும் பரபரப்புடன் நகர, இடைவேளை காட்சி உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் பத்தாவும் அவரது ஆட்களும் உண்மையைத் தேடும் பயணத்தில் நகைச்சுவை, சந்தேகம், எமோஷன் என பல்வேறு தருணங்கள் இடம்பெறுகின்றன.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் வழக்கமான ரௌடி கதைக்குள் குழந்தைகளின் பார்வையையும் இணைத்துள்ளார். ஊருக்கே பயத்தை ஏற்படுத்தும் ஒருவன், ஒரு குழந்தையின் மனதில் எப்படி இருக்கிறான் என்பதுடன், உண்மையான ‘கெத்து’ என்றால் என்ன என்ற கேள்வியையும் கதை முன்வைக்கிறது. அதிக வன்முறை மற்றும் பழிவாங்கும் காட்சிகளை தவிர்த்து இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது படத்தின் தனித்துவமாக உள்ளது.
அதேநேரத்தில், குறைவான கதாபாத்திரங்களும் ஓரளவு எதிர்பார்க்கக்கூடிய முடிவும் படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன. இடைவேளைக்குப் பிறகு பெரிய திருப்பங்கள் இல்லாமல் கதை நகர்வதும் சற்று ஏமாற்றம் தருகிறது. இன்னும் அழுத்தமான காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தால் படம் வேறு அனுபவத்தை கொடுத்திருக்கலாம்.பத்தாவிடம் பயப்படவும் வேண்டும், அதே நேரத்தில் அவர் பேசும்போது சிரிக்கவும் வேண்டும் என்ற இரு உணர்வுகளையும் விஜய் சேதுபதி தனது நடிப்பில் சரியாக கொண்டு வந்துள்ளார். அவரது மனைவியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் மற்றும் மகளாக நடித்த சிறுமியும் கதைக்கு வலு சேர்க்கின்றனர். குறிப்பாக லிஜோமோலின் இயல்பான நடிப்பு எமோஷனல் காட்சிகளுக்கு கூடுதல் பலம்.
குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜ் பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார். பயம், பதற்றம், கருணை என வெவ்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். விஜய் சேதுபதியும் அவரும் மரத்தடியில் பேசும் காட்சி படத்தின் முக்கியமான உணர்வுபூர்வ தருணங்களில் ஒன்றாக அமைகிறது.சாய் அபயங்கரின் இசையும் படத்துக்கு துணையாக உள்ளது. ‘ஊரோட ஒத்த டான்’, ‘மகளே’ பாடல்கள் திரையில் ரசிக்கும்படி அமைந்துள்ளன. காமெடி மற்றும் உணர்வுபூர்வ காட்சிகளுக்கான பின்னணி இசையும் கதையின் மனநிலைக்கு பொருத்தமாக இருக்கிறது.
