‘தி பாரடைஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு? -திரை விமர்சனம்

ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிறகும் குற்றப் பரம்பரை என்ற அடையாளத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் சவாரி இன மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் பண்ணையாளரான மாலிக், தனது சட்டவிரோத கள்ளச்சாராய தொழிலுக்காக அந்த மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். அவர்களுக்கு சட்டப்பூர்வமான அடையாளம் கிடைப்பதையும் தடுத்து தனது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டுகிறார்.

சிறுவயதில் மாலிக்கால் அவமானப்படுத்தப்படும் சடையன், அதன் பிறகு அவரது கூட்டாளி ஒருவரை கொலை செய்ததால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, தனது மக்களுக்கான அடையாளத்தை மறுக்கும் மாலிக்கை பழிவாங்க சடையன் களமிறங்குகிறார். இந்தப் போராட்டத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மீதிக்கதை.

சடையன் கதாபாத்திரத்தில் நானி ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபம், ஆவேசம், தாயின் மீதான மனநிலை, பின்னர் உண்மையை அறிந்ததும் ஏற்படும் மாற்றம் என பல இடங்களில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது. அதே நேரத்தில், தொடர்ச்சியாக வில்லன்களை வீழ்த்திக்கொண்டே செல்லும் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துகின்றன. இதனால் கதையின் அடுத்த கட்டம் குறித்த கேள்வியும் எழுகிறது.கயடூ லோகர் நடித்திருக்கும் கதாபாத்திரம் ஆரம்பத்தில் முக்கியமானதாக தோன்றினாலும், கதாநாயகனின் பயணம் தொடங்கிய பிறகு அதன் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது. அவரது கதாபாத்திரத்துடன் தொடர்புடைய சில காட்சிகளும் அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

மோகன் பாபு நடித்த மாலிக் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பே அவரது மகன் விக்ரம் மாலிக் களமிறங்குகிறார். ராகவ் ஜுயல் அந்த கதாபாத்திரத்தில் மிரட்ட முயன்றாலும், வில்லத்தனம் முழுமையாக எடுபடவில்லை. சோனாலி குல்கர்னி, ஈஸ்வரி ராவ், தனிகெல்லா பரணி, சத்யராஜ் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்மக்கா கதாபாத்திரம் ஆரம்பத்தில் போராட்ட குணத்துடன் காட்டப்பட்டாலும், பின்னர் அதன் வலிமை குறைந்து விடுகிறது.

அனிருத் இசையமைத்துள்ள பின்னணி இசை ஆரம்ப காட்சிகளில் படத்தின் உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது. ஆனால் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சிகளுடன் இசையும் இடைவிடாமல் பயணிப்பதால், ஒரு கட்டத்தில் அது தேவையற்ற இரைச்சலாக மாறுகிறது. ஆறு பகுதிகளாக விரியும் திரைக்கதையில் அம்மா சென்டிமென்ட் உள்ளிட்ட சில அம்சங்கள் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயலை நினைவுபடுத்துகின்றன.

நவீன் நூலியின் படத்தொகுப்பும் சில இடங்களில் வேகத்தை கட்டுப்படுத்தாமல் செல்கிறது. சிச் சாயின் ஒளிப்பதிவு படத்தின் உலகத்திற்கு தேவையான காட்சியமைப்பை வழங்குகிறது. மொத்தத்தில், வித்தியாசமான பின்னணியை எடுத்துக்கொண்டாலும், தொடர்ச்சியான ஆக்‌ஷன் மற்றும் சில பலவீனமான கதாபாத்திர வடிவமைப்புகளால் ‘தி பாரடைஸ்’ முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் தடுமாறுகிறது.

—

Add a Comment

Leave a Reply