இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் மனிதராக நிவின் பாலி நடித்துள்ளார். இத்தனை காலம் கடந்தாலும், அஞ்சலியுடனான அவரது காதல் மட்டும் மாறாமல் தொடர்கிறது. காலங்கள் மாறினாலும் காதலியை தேடும் அவரது பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தீபாவளி இரவில் ரயிலின் முன்பதிவு இல்லாத கடைசி பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கும் நிவின் பாலிக்கு, நீண்ட காலமாக தேடி வரும் காதலி கனவில் தோன்றுகிறாள். அந்த நேரத்தில் துபாயில் பல ஆண்டுகள் வேலை செய்து விட்டு சொந்த ஊர் திரும்பும் சூரி, அதே ரயிலில் பயணம் செய்கிறார். அவர் நிவின் பாலியை எழுப்பிய பிறகு, இருவருக்கும் இடையே எதிர்பாராத சம்பவங்கள் தொடங்குகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ரயில் பயணத்தில் இவர்களுடன் ஒரு எலியும் முக்கிய பங்காக இடம்பெறுகிறது. நிவின் பாலி தனது காதலியை கண்டுபிடித்தாரா, சூரி தனது சொந்த ஊரை சென்றடைந்தாரா என்பதுதான் கதையின் முக்கிய கேள்விகளாக நகர்கின்றன.
மனிதர்களின் உணர்வுகளை யதார்த்தமாக கையாள்வது இயக்குநர் ராமின் படங்களின் தனிச்சிறப்பு. இந்த படத்திலும் அன்பு, உறவுகள் மற்றும் உயிர்களின் மதிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து பல காட்சிகளை அமைத்துள்ளார். குறிப்பாக, இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்ற கருத்தை நிவின் பாலியின் கதாபாத்திரம் வழியாக வித்தியாசமான முறையில் பதிவு செய்துள்ளார்.
இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள் ஒரே ரயில் பயணத்தில் சந்திப்பதால் உருவாகும் சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில், சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைவதால் பரபரப்பு குறைவாக உணரப்படுகிறது. இருப்பினும், உணர்ச்சிகளை மையமாக வைத்து ராம் உருவாக்கியுள்ள பல காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன.
